Sunday, April 12, 2015

அம்பேத்கர் விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு: நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும்: கி.வீரமணி

சென்னை பெரியார் திடலில் வரும் 14ஆம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

உதவி ஆணையரின் ஆணை

சென்னை மாநகர காவல் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளரின் செயல்முறை ஆணை முன்னிலை:- ஜெ. அய்யப்பன்.

ந.க.எண்.15/உ.ஆ.(வேப்பேரி) முகாம் /2015 நாள்: 12.4.2015

சிறுதலைப்பு:  திராவிடர் கழகம் - 14.4.2015 அன்று மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது - தொடர்பாக.
பார்வை:  திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண்.84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -7 அவரது 29.3.2015 நாளிட்ட மனு.
***
ஆணை:
சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை நகரில் தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி, 9.4.2015 அன்று காலை 8.00 மணி முதல் 24.4.2015 அன்று காலை 8 மணி வரை (இரு நாட்களும் உட்பட), சென்னை நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும், சட்டம், ஒழுங்கு பொது அமைதி மற்றும் போக்குவரத்தை கருத்திற்கொண்டு 15 நாட்களுக்கு தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-உட்பிரிவு 3(அ)ன் படி இந்நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 5 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பித்தால், உட்பிரிவு (ஆ)-வின்படி அம்மனுவை பரிசீலனை செய்து அனுமதி/மறுப்பு ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 18.3.2015 அன்று காவல் அனுமதி பெற்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது திரு. கே. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் கீழ்க்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை பெண்கள், எங்கள் பெண்கள் நிகழ்த்தி முன்னாலே நடத்துவார்கள், வந்து பார், ஒத்தக் கருத்துள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றியவுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். யார் யார் வரனும்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்குங்க இடம் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உண்டு. ஏன்னா நான் என்ன சாப்பிடனும்கிறத இராம கோபாலன் அய்யர் முடிவு பண்றதா?”
3. மேலும், 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் பத்திரிகைகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை  தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் (25), தனி நபர்களும் மனு அளித்துள்ளனர்.

4. மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் ஜி.1 வேப்பேரி காவல் நிலைய கு.எண்.634/2015 ச/பி 153(கி), 295(கி), 505 (வீ) (தீ) (நீ) & 505 (2) இதச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு (கீ.றி.ழிஷீ. 10585/2015) நிலுவையில் உள்ளது.

5. திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 அவரது 29.3.2015 நாளிட்ட மனுவில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில், மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதைக் கொச்சைப்படுத்தியும், எதிர்த்து போராடுபவர்கள்மீதும், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
6. மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை.
7. இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காவல் உதவி ஆணையாளர்

வேப்பேரி, சரகம், சென்னை - 7
பெறுநர்:

திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்,
பெரியார் திடல், எண். 84/1(50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

தகவலுக்காக
காவல்துணை ஆணையாளர்கள், கீழ்ப்பாக்கம் மாவட்டம் மற்றும் போக்குவரத்து (கிழக்கு).
காவல் இணை ஆணையாளர்கள், கிழக்கு மண்டலம், நுண்ணறிவுப் பிரிவு மற்றும் போக்குவரத்து (தெற்கு)
காவல்கூடுதல் ஆணையாளர்கள், தெற்கு, வடக்கு மண்டலம் மற்றும் போக்குவரத்து, சென்னை காவல்.
காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை காவல்.

இவ்வாறு அந்த ஆணை கூறுகிறது.
இந்த ஆணையை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைக் கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கி.வீரமணி கூறியுள்ளார். 

மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது: இளங்கோவன் பேட்டி



 மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உலக மகளிர் நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது. ஏனென்றால் மானமுள்ள மனுஷன்தான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும். அவருக்கு அந்த தகுதி கிடையாது. இரண்டாவதாக அவர் அரசாங்க வழக்கீல் மூலம் வழக்கை பதிவு செய்ததாக சொல்லியிருக்கின்றார். மந்திரி ஊழல் குற்றச்சாட்டு வரும்போது, அரசாங்க வழக்கறிஞரை வைக்கக் கூடாது. அவரது சொந்த வழக்கறிஞரைத்தான் வைக்க வேண்டும். ஊழல் புகாருக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் மீது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழக அரசுக்கு எதிராக இதுவரை தான் தெரிவித்த 15 குற்றச்சாட்டுக்களில், ஒரு குற்றச்சாட்டுக்கு மட்டும் தன் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படியென்றால் மற்ற 14 குற்றச்சாட்டுக்களும் உண்மை என அதிமுகவினர் ஒத்துக்கொள்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். 

சென்னையில் கடந்த 8ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் 
கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் சேலம் 5 ரோடு பகுதி கண்ணகி தெருவில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருகிற சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து வருமான வரித்துறையும், தேர்தல் கமிஷனும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டை உடனடியாக சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் அவரது செல்வாக்கு அமைச்சரவையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.

அமைச்சர் குறித்து அவதூறாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று இடைப்பாடிபழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எஸ்.ஜெகன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
                               
                                          

தொழிலாளர்களின் மனம் குளிர்ந்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக நடைபெறும் - கலைஞர்


                   
                                      போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான 12வது ஊதிய ஒப்பந்தம் 1-9-2013 முதலே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். 

ஆனால் அ.தி.மு.க. அரசு பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உட்பட 11 போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. 

அதன் பிறகு தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவே முன் வந்தார். கூடுதல் நிதித்துறைச் செயலாளர், உமாநாத், ஐ.ஏ.எஸ்., தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்தது. 

இந்தக் குழுவினரும், பேச்சு வார்த்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய் வதற்கான அறிவிப்பினைக் கொடுத்தன. 

அதன் பிறகு, குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடந்தது. 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிலே பங்கேற்றார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும், முக்கிய பிரச்சினைகளில் உடன்பாடு வராததால், மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரு வதென்றும், வேலை நிறுத்தத்தை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டு, தொழிற் சங்கத்தினர் வெளியேவந்தார்கள்.

அப்போது கூட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொழிற் சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு காணப்படவில்லை. அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தனர். அதனால் பிரச்சினை இழுபறியாகவே நீடித்தது.

இந்தநிலையில் தான் 10-4-2015 அன்று ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலே அந்தத் துறையின் அமைச்சரும் கலந்து கொண்ட போதிலும், அதிலும் முடியாமல், கோரிக்கையை ஏற்க தமிழக அரசிடம் நிதியில்லை என்று அமைச்சர் அரசின் மோசமான நிதி நிலைக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து, மீண்டும் 13ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினை இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதிலே எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஏனென்றால் கடந்த காலத்தில், 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா; முதல்வர் பொறுப்பேற்றிருந்த அந்தக் காலத்திலேயே போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சரிபாதியை தனியாருக்குத் தாரை வார்க்க ஆணை பிறப்பித்தவர் தான்! அப்போது நான் விடுத்த அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், மீண்டும் கழக ஆட்சி அமையும்போது அனைத்துப் பேருந்துகளையும் அரசுடைமையாக்குவோம்” என்று அறிவித்த பிறகுதான், ஜெயலலிதா அரசு அந்தப் பிரச்சினையைக் கை விட்டது.

அது மாத்திரமல்ல; தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகித போனசை, 8.33 சதவிகிதமாக அ.தி.மு.க. அரசு குறைத்தது. அதனை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களில் 60 ஆயிரம் பேரை கைது செய்து சிறையிலே அடைத்தது. 

5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கமே செய்தார்கள். தொழிலாளர்களில் பலருக்கு பதவி இறக்கம், பணி மாற்றம், ஊர் மாற்றம் என்றெல்லாம் கடுமையான தண்டனைகள்
வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களுக்கு வேலையில்லை, ஊதியம் இல்லை என்று அறிவித்தார்கள்.

2005ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தித் தொழிற்சங்கங்கள் பேசிவிட்டு வெளியே வந்த பிறகு, தன்னிச்சையாக 7 சதவிகித ஊதிய உயர்வு என்று அறிவித்ததோடு, தொழிற்சங்கங்களோடு ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒப்பந்தம் செய்வதற்கு மாறாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றினார்கள். இதன்காரணமாக 1-9-2001 முதல் 31-8-2003 வரை எந்தவித ஒப்பந்தப் பலனும் வழங்கப்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாகக் குறைத்ததோடு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் 25 ஆயிரம் பேரைக் குறைத்தார்கள். போக்குவரத்துக் கழகங்கள் என்றாலே அதிமுக அரசுக்கு என்ன காரணத்தாலோ எழும் வெறுப்புணர்வு காரணமாக, பேருந்துகளையும்,
தொழிலாளர்களையும் குறைத்த காரணத்தால், போக்குவரத்துக் கழகங்களில் பல
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ், ஒப்பந்தம் பறிப்பு, சலுகை உரிமை பறிப்பு மூலம் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் இருபதாயிரம் ரூபாய் வரை பறித்து பழி வாங்கிய ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.

இவற்றையெல்லாம் கூறும்போது, தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினை எவ்வாறெல்லாம் தீர்க்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். 2006இல் கழக ஆட்சி அமைந்த பிறகு குறைக்கப்பட்ட பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. 1-9-2003இல் செய்யப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்தத்தை, ஓராண்டுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வந்து, 1-9-2007 முதல் புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி 12 சதவிகித ஊதிய உயர்வுகள், குறைந்த பட்சம் ரூ. 1000, அதிகப் பட்சமாக ரூ. 2000 வழங்கப்பட்டது. ஒப்பந்தக் காலத்தை மீண்டும் 3 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.

கழக ஆட்சியில் போனஸ் ரூ 6,000 என்பது 8,400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களை, பணி நாட்களாகக் கருதி, ஊதியம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஓய்வூதியத்திற்கு கடைசி பத்து மாத ஊதியம் கணக்கிடுவது என்பதை மாற்றி, கடைசி மாத ஊதியத்தில் 50 சத விகிதம் எனவும் கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஓய்வூதியத்திற்கு தகுதி ஆண்டுகள் 30. அ.தி.மு.க. ஆட்சியில் அதை 33 ஆண்டுகள் என்று உயர்த்தப்பட்டதை, கழக ஆட்சியில் மீண்டும் 30 ஆண்டுகளாக மாற்றினோம்.
பணியாளர் நியமனச் சட்டத்தை நீக்கி 49 ஆயிரம் புதிய பணியாளர்களை கழக ஆட்சியில் நியமித்தோம்.

2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்றாண்டுகள் கழிந்ததும், மீண்டும் 2010ஆம் ஆண்டு ஓர் ஊதிய ஒப்பந்தத்தின் மூலம், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்கப்பட்டது. அப்போது ஒப்பந்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், ஒப்பந்தத்திற்கான பலன்களை 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கான வகையில் முதல் கட்டமாக ரூ. 512 கோடியும், கூடுதலாக ரூ. 150 கோடியும் நிதி உதவி செய்து கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் கழக ஆட்சியில் எந்த அளவுக்கு தீர்க்கப்பட்டன என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்படுகின்றன என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தான் சுருக்கமாக இங்கே எடுத்து வைத்துள்ளேன். இனியாவது இப்படிப்பட்ட நிலைமை நீடிக்காமல், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப் பட்டு விட்டன என்பதையும், 2013ஆம் ஆண்டிலேயே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை இரண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டு போவதையும் மனதிலே கொண்டு, 13ஆம் தேதியன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்கு வரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமானதொரு முடிவினைக் காண வேண்டும். தமிழக அரசிடம் நிதியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 

அ.தி.மு.க. அரசு எப்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததோ, அப்போதே இந்த ஆட்சியில் அந்த நிலைமை தான் வரும் என்பது பொது மக்களுக்குத் தெரியாதா என்ன? எனவே அதையே சொல்லிக்கொண்டிராமல், பேச்சுவார்த்தையையும் நீடித்துக் கொண்டே போகாமல்
தொழிலாளர்களின் மனம் குளிர்ந்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக
நடைபெறும் என்பதை மனதிலே கொண்டு தமிழக அரசு 13ஆம் தேதிய பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவினை அறிவிக்க முன் வர வேண்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


                                     காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்.எம்.எஸ். அழைப்புகள் மூலம் மட்டும் இதுவரை 31 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 13-ந் தேதி டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் மகா தொடர்பு இயக்க கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் குறித்தும் அவர்களது பங்கு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது. 

இதை தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் மாநில, மண்டல, கிளை அளவிலான மகா தொடர்பு இயக்கம் நடைபெறும். இது, வரும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தொண்டர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார்.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக பீரங்கி வெங்கடேசனிடம் தீவிர விசாரணை!

ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக கொடுக்கப்பட்ட அழுத்ததால் நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பீரங்கி வெங்கடேசனை பிடித்துள்ள சிபிசிஐடி போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

இந்த விசாரணையின்போது பீரங்கி வெங்கடேசனிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரில் முக்கிய நபரான பீரங்கி முருகேசன் இருந்ததாகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக நெல்லையில் உள்ள முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு பலமுறை பீரங்கி வெங்கடேசன் சென்றுள்ளார் என்றும், முத்துக்குமாரசாமியும், அவரது மனைவியும் மிரட்டப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை முத்துக்குமாரசாமியின் மனைவி சிபிசிஐடி உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளதால், பீரங்கி வெங்கடேசன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, April 9, 2015

ஆந்திர ஆளும் கட்சி தலைவர்கள் கடத்தல்காரர்களுக்கு உதவியாக உள்ளனர்: சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு



                                           
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை சம்பவம் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இந்த படுகொலை திட்டமிட்டு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளது. கடத்தல் கும்பலினர் தப்புவதற்காகவும் அவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர சம்பவத்தில் ஒரு கடத்தல்காரர் கூட இப்போது வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் சாதாரண கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர ஆளும் கட்சி தலைவர்கள் கடத்தல்காரர்களுக்கு உதவியாக உள்ளனர். இந்த படுகொலை மற்றும் கடத்தல் சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தவேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.