Sunday, April 12, 2015

மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது: இளங்கோவன் பேட்டி



 மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உலக மகளிர் நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். மான நஷ்ட வழக்கு போடுவதற்கு இடைப்பாடி பழனிச்சாமிக்கு அருகதையே கிடையாது. ஏனென்றால் மானமுள்ள மனுஷன்தான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும். அவருக்கு அந்த தகுதி கிடையாது. இரண்டாவதாக அவர் அரசாங்க வழக்கீல் மூலம் வழக்கை பதிவு செய்ததாக சொல்லியிருக்கின்றார். மந்திரி ஊழல் குற்றச்சாட்டு வரும்போது, அரசாங்க வழக்கறிஞரை வைக்கக் கூடாது. அவரது சொந்த வழக்கறிஞரைத்தான் வைக்க வேண்டும். ஊழல் புகாருக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் மீது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழக அரசுக்கு எதிராக இதுவரை தான் தெரிவித்த 15 குற்றச்சாட்டுக்களில், ஒரு குற்றச்சாட்டுக்கு மட்டும் தன் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படியென்றால் மற்ற 14 குற்றச்சாட்டுக்களும் உண்மை என அதிமுகவினர் ஒத்துக்கொள்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். 

சென்னையில் கடந்த 8ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் 
கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் சேலம் 5 ரோடு பகுதி கண்ணகி தெருவில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருகிற சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து வருமான வரித்துறையும், தேர்தல் கமிஷனும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டை உடனடியாக சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் அவரது செல்வாக்கு அமைச்சரவையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.

அமைச்சர் குறித்து அவதூறாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று இடைப்பாடிபழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எஸ்.ஜெகன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
                               
                                          

No comments:

Post a Comment