Sunday, April 12, 2015

அம்பேத்கர் விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு: நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும்: கி.வீரமணி

சென்னை பெரியார் திடலில் வரும் 14ஆம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

உதவி ஆணையரின் ஆணை

சென்னை மாநகர காவல் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளரின் செயல்முறை ஆணை முன்னிலை:- ஜெ. அய்யப்பன்.

ந.க.எண்.15/உ.ஆ.(வேப்பேரி) முகாம் /2015 நாள்: 12.4.2015

சிறுதலைப்பு:  திராவிடர் கழகம் - 14.4.2015 அன்று மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது - தொடர்பாக.
பார்வை:  திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண்.84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -7 அவரது 29.3.2015 நாளிட்ட மனு.
***
ஆணை:
சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை நகரில் தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி, 9.4.2015 அன்று காலை 8.00 மணி முதல் 24.4.2015 அன்று காலை 8 மணி வரை (இரு நாட்களும் உட்பட), சென்னை நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும், சட்டம், ஒழுங்கு பொது அமைதி மற்றும் போக்குவரத்தை கருத்திற்கொண்டு 15 நாட்களுக்கு தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-உட்பிரிவு 3(அ)ன் படி இந்நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 5 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பித்தால், உட்பிரிவு (ஆ)-வின்படி அம்மனுவை பரிசீலனை செய்து அனுமதி/மறுப்பு ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 18.3.2015 அன்று காவல் அனுமதி பெற்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது திரு. கே. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் கீழ்க்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை பெண்கள், எங்கள் பெண்கள் நிகழ்த்தி முன்னாலே நடத்துவார்கள், வந்து பார், ஒத்தக் கருத்துள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றியவுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். யார் யார் வரனும்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்குங்க இடம் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உண்டு. ஏன்னா நான் என்ன சாப்பிடனும்கிறத இராம கோபாலன் அய்யர் முடிவு பண்றதா?”
3. மேலும், 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் பத்திரிகைகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை  தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் (25), தனி நபர்களும் மனு அளித்துள்ளனர்.

4. மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் ஜி.1 வேப்பேரி காவல் நிலைய கு.எண்.634/2015 ச/பி 153(கி), 295(கி), 505 (வீ) (தீ) (நீ) & 505 (2) இதச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு (கீ.றி.ழிஷீ. 10585/2015) நிலுவையில் உள்ளது.

5. திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 அவரது 29.3.2015 நாளிட்ட மனுவில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில், மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதைக் கொச்சைப்படுத்தியும், எதிர்த்து போராடுபவர்கள்மீதும், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
6. மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை.
7. இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காவல் உதவி ஆணையாளர்

வேப்பேரி, சரகம், சென்னை - 7
பெறுநர்:

திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்,
பெரியார் திடல், எண். 84/1(50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

தகவலுக்காக
காவல்துணை ஆணையாளர்கள், கீழ்ப்பாக்கம் மாவட்டம் மற்றும் போக்குவரத்து (கிழக்கு).
காவல் இணை ஆணையாளர்கள், கிழக்கு மண்டலம், நுண்ணறிவுப் பிரிவு மற்றும் போக்குவரத்து (தெற்கு)
காவல்கூடுதல் ஆணையாளர்கள், தெற்கு, வடக்கு மண்டலம் மற்றும் போக்குவரத்து, சென்னை காவல்.
காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை காவல்.

இவ்வாறு அந்த ஆணை கூறுகிறது.
இந்த ஆணையை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைக் கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கி.வீரமணி கூறியுள்ளார். 

No comments:

Post a Comment