Thursday, April 9, 2015

ஆந்திர ஆளும் கட்சி தலைவர்கள் கடத்தல்காரர்களுக்கு உதவியாக உள்ளனர்: சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு



                                           
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை சம்பவம் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இந்த படுகொலை திட்டமிட்டு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளது. கடத்தல் கும்பலினர் தப்புவதற்காகவும் அவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர சம்பவத்தில் ஒரு கடத்தல்காரர் கூட இப்போது வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் சாதாரண கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர ஆளும் கட்சி தலைவர்கள் கடத்தல்காரர்களுக்கு உதவியாக உள்ளனர். இந்த படுகொலை மற்றும் கடத்தல் சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தவேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment